திருத்தந்தையின் குரல்

Pope Francis addresses the world at angelus prayer time

என்றும் நிலைத்திருக்கவல்ல இறையரசை வரவேற்போம்

இவ்வுலக ஆட்சியை ஒத்திராத தன் அரசு வழியாக, நம் வாழ்விற்கு, ஓர் அர்த்தத்தைத் தர முன் வருகிறார், நம் இதய அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர் இயேசு

 

ஆயுதங்களின் உதவியுடன் அமைக்கப்படும் அரசுகள் நிலைத்துநிற்க முடியாமல் அழிந்துபோவதை வரலாற்றில் கண்டுள்ள நாம், இயேசு அமைத்த அரசு ஒன்றே நீடித்து நிலைத்து நிற்பதைக் காண்கிறோம் என, தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஞாயிறு முழுவதும் மழை தூறிக் கொண்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், 20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் புனித பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, அவர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

படைப்பின் உயிர்நாடி என்பது, ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது உண்மையல்ல, மாறாக, வரலாறு மற்றும் படைப்பின் தலைவனாம் இயேசு கிறிஸ்துவின் முழுமையான வெளிப்பாட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது என்றும், இந்தப் பயண வரலாற்றின் இறுதி நோக்கம், இயேசுவின் அரசாகும் என்றும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னிடம் கொண்டுவரப்பட்ட இயேசுவை நோக்கி, அவர் அரசரா என பிலாத்துக் கேட்டபோது, என் அரசு இவ்வுலக ஆட்சியைப் போன்றது அன்று, என்றும், அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை என்றும், இயேசு பதிலளித்ததைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அப்பம் பலுகிய புதுமைக்குப்பின், மக்கள், அவரை அரசராக்க விரும்பியதையும், இயேசுவோ அங்கிருந்து மறைந்து சென்றதையும் குறிப்பிட்டு, இயேசுவுக்கு அரசியல் ஆசைகள் இருந்ததில்லை என்பது, பலவேளைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசியல் அதிகாரத்தையும் தாண்டி மேலான ஒன்று உள்ளது, அது உண்மைக்கு சான்று பகரும் அன்பெனும் அதிகாரம் என உரைத்த திருத்தந்தை, இயேசு உருவாக்க விரும்பும் அன்பு, நீதி, மற்றும், அமைதியின் அரசே, உலகு முடிவுவரை நிலைத்திருக்க வல்லது என்றும், இந்த அரசுக்கு இயேசுவே மன்னர் என்றும் கூறினார்.

அமைதி, சுதந்திரம், மற்றும், வாழ்வின் முழுமையை விரும்பும் ஒவ்வொருவரும், தங்கள் இதயத்தில், இயேசுவை, அரசராக அமர வைப்பதன் வழியாக, அமைதி, நீதி, மற்றும், முழுமையை உலகில் நிலை நாட்ட உதவமுடியும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்காக நாம் இயேசுவை அரசராக நம் இதயத்திற்குள் வரவேற்போம் எனவும் எடுத்துரைத்தார்.

கரு வத்திக்கான் செய்திகள்
உரு அருட்பணி பிரகாஷ் SdC,  RVA Tamil

 

Add new comment

1 + 4 =

Please wait while the page is loading