புனித வெள்ளி சிலுவைப்பாதையின் மையக் கருத்துக்கள்

ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளி இரவு கொலோசெயம் திடலில் நடைபெறும் சிலுவைப்பாதை (ANSA)

மனித வர்த்தகத்திற்கு எதிராக, குறிப்பாக, இந்த வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடிய அனுபவங்களைக் கொண்டு, இவ்வாண்டு சிலுவைப்பாதையை தான் உருவாக்கியதாக, அருள் சகோதரி யூஜேனியோ பொனெத்தி (Eugenia Bonetti) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று இரவு 9 மணியளவில் உரோம் நகரின் கொலோசெயம் திடலில் நடைபெறும் சிலுவைப்பாதையின் சிந்தனைகளை உருவாக்கும் பொறுப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொன்சொலாத்தா (Consolata) துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி யூஜேனியா பொனெத்தி அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்.

80 வயதான அருள் சகோதரி பொனெத்தி அவர்கள், தான் உருவாக்கிய சிலுவைப்பாதையின் முக்கிய கருத்துக்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்ட வேளையில், இன்றைய உலகில், கிறிஸ்துவைப்போல், வெவ்வேறு வடிவங்களில் சிலுவையில் அறையப்படுபவர்களைக் குறித்து புனித வெள்ளி சிலுவைப்பாதை சிந்திக்க வைக்கும் என்று கூறினார்.

பிலாத்துவைப்போல், இன்றைய உலகில் அதிகாரத்தில் இருப்போர், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து மக்களைக் குறித்து முடிவுகள் எடுத்துவரும் வேளையில், சகாரா போன்ற பாலை நிலங்களில், மக்களின் எலும்புக்கூடுகள் குவிந்து வருகின்றன என்றும், பல்வேறு கடல்கள், மனிதக் கல்லறைகளாக மாறி வருகின்றன என்றும் அருள் சகோதரி பொனெத்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இத்தாலியிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பணியாற்றும் அருள் சகோதரிகளிடம், மனித வர்த்தகத்தின் கொடுமைகளை பல ஆண்டுகளாக உணர்த்தி வருகிறார் என்றும், இதன் விளைவாக, அவர், 'இனி ஒருபோதும் அடிமைகள் கிடையாது' என்று பொருள்படும் “Slaves no More” என்ற கழகத்தை உருவாக்கினார் என்றும் CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மனித வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை கத்தோலிக்கத் திருஅவையில் உருவாக்க, இந்தக் கொடுமையை ஒழிக்கும் செப நாளை உலகெங்கும் அறிவிக்க, அருள்சகோதரி பொனெத்தி அவர்கள், 2013ம் ஆண்டு திருத்தந்தையைக் கேட்டுக்கொண்டார்.

அவரது விண்ணப்பத்தின் அடிப்படையிலும், அவர் வழங்கிய ஆலோசனையின்படியும், மனித வர்க்கத்தால் துன்புற்ற புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் திருநாளான பிப்ரவரி 8ம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிராக செபிக்கும் உலக நாள் என்று, 2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (வத்திக்கான் செய்தி) 

Add new comment

1 + 0 =

Please wait while the page is loading