தண்ணீருக்கு கண்ணீர்வடிக்கும் சென்னை 

Chennai stares at severe drinking water crisis; people forced to pay ... Times Now

சென்னையின் மென்பொருள் பூங்கா வளாகங்கள் அமைந்துள்ள சாலையின் முடிவில் தெரிகிறது செம்மஞ்சேரி. கடந்த வாரம் ஐந்து நாட்களாக செம்மஞ்சேரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

செம்மஞ்சேரியில் வசிக்கும் பலரும், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை இந்த ஆண்டு சந்திப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் தண்ணீர் சேகரிப்பதில் தங்களது நாளை தொடங்குகிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிந்தது.

இளம் வயது தாயான சங்கீதா (28) தனது இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்ட பல இடங்களுக்கும் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டியிருந்தது.

செம்மஞ்சேரியில் ஒன்பதாவது தெருவில் வசிக்கும் இவர், தண்ணீர் வராததால், செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்து வந்ததாக கூறுகிறார்.

''காலை ஒன்பது மணிவரை பல இடங்களுக்குச் சென்று இரண்டு குடம் நீரை எடுத்துவந்து இரண்டு குழந்தைகளை குளிக்க வைத்தேன். மிகவும் சிரமமாக இருந்தது. மாலை நேரத்தில் தண்ணீர் விநியோகம் நடந்தால் முந்தைய தினமே திட்டமிட்டு வேலைகளை செய்வோம். காலை நேரத்தில் தண்ணீருக்காக அலைவதால், வேலைக்கு செல்வதற்கு தாமதமாகிறது,''என்கிறார் சங்கீதா.

சங்கீதாவை போல பலரும் இங்கு குடிநீர் தேவைக்கு கேன் தண்ணீரை வாங்குகிறார்கள். அரசு வழங்கும் தண்ணீர், குளியல், கழிவறை பயன்பாட்டிற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், தனியார் நிறுவனத்திடம் காசுக்கு குடிநீர் வாங்குவதாக கூறுகிறார்கள்.

''ஒரு மாதத்திற்கு குடிநீருக்கு மட்டுமே சுமார் ரூ.600 வரை செலவாகிறது. அதிலும் கோடை காலத்தில் செலவு அதிகமாகிறது. கணவர் கார் ஓட்டுநராக இருக்கிறார். அவரது வருமானத்தில் சேரும் பணத்தில் முதலில் குடிநீருக்கு காசு எடுத்துவைத்து கொள்வேன்'' என்கிறார் சங்கீதா.

செம்மஞ்சேரியில் பல தெருக்களில் ஐந்து நாட்கள் கழித்து தண்ணீர் வழங்கப்பட்டதால், தங்களது வீட்டில் உள்ள எல்லா பாத்திரங்களிலும் மக்கள் தண்ணீர் சேகரித்தார்கள்.

பெண்கள் அவசரமாக துணிகளை துவைத்து, குடங்களில் தண்ணீர் பிடிப்பதைப் பார்க்க முடிந்தது. ஆண்கள் குளித்துவிட்டு ஈர உடைகளுடன் பக்கெட்களில் தண்ணீர் பிடித்தார்கள்.

செம்மஞ்சேரியில் சுமார் 6,700 குடும்பங்கள் வசிப்பதாகக் கூறும் சமூக ஆர்வலர் லில்லி மார்கரெட், பலரும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், தண்ணீர் வந்தால் பிடித்து வைக்க குழந்தைகளை சிலர் வீட்டில் தனியாக விட்டுச் செல்கிறார்கள் என்கிறார்.

''குழந்தைகளை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள், தண்ணீர் வந்தால் பிடித்துவைக்க குழந்தைகள் வீட்டில் இருக்கட்டும் என தனியாக விட்டுச்செல்கிறார்கள். இங்கு 102 தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கட்டட வேலை, மேற்பார்வையாளர், வீட்டுவேலை போன்ற வேலைகளுக்குச் செல்கிறார்கள். தினமும் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்பவர்கள், தங்களின் வருமானத்தை தண்ணீருக்கு செலவு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள்,'' என்கிறார் லில்லி.

செம்மஞ்சேரியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வழிகள் குறித்து சென்னை பெருநகர நீர் வழங்கல் வாரிய இயக்குனர் ஹரிஹரனிடம் கேட்டோம்.

செம்மஞ்சேரி, கண்ணகி நகர் மற்றும் பெரும்பாக்கம் போன்ற குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் இருக்கும் இடங்களில் கவனத்துடன் தண்ணீர் விநியோகம் நடப்பதாக கூறுகிறார் ஹரிஹரன்.

''குடிசைமாற்று வாரியம் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் வழங்கப்படும் தண்ணீரின் அளவில் நாங்கள் மாற்றம் செய்யவில்லை. அவர்களுக்கு வழங்கும் அளவு குறைக்கப்படவில்லை. தினமும் சுமார் 5 மில்லியன் லிட்டர் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய இடங்களுக்கு வழங்கப்படுகிறது,''என்கிறார்.

ஐந்து நாட்களாக தண்ணீர் வராதது குறித்து கேட்டபோது, ''ஐந்து நாட்களாக தண்ணீர் வராமல் இருந்தால் மக்கள் மறியலில் ஈடுபடுவார்கள். ஒரு சில இடங்களில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம். ஆனால் ஏழை மக்கள் வசிக்கும் இந்த பகுதிகளில் தண்ணீரின் அளவை நாங்கள் குறைக்கவில்லை,'' என்கிறார் ஹரிஹரன்

(நன்றி: பிபிசி தமிழ்)

Add new comment

1 + 0 =

Please wait while the page is loading