ஜூன் 5, சுற்றுச்சூழல் உலக நாள், உலகளவில் எவ்வாறு சிறப்பிக்கபசுகிறது?

World Environment Day: Sand sculpture put up at Puri. PC: KalingaTV.com

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 5ம் தேதி, சுற்றுச்சூழல் உலக நாள் (World Environment Day - WED) சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளை உலகெங்கும் சிறப்பிக்கும் தீர்மானம், 1972ம் ஆண்டு, ஐ.நா. அவையால் பரிந்துரைக்கப்பட்டது. 1974ம் ஆண்டு, "ஒரே ஒரு பூமிக்கோளம்" (Only one Earth) என்ற மையக்கருத்துடன் சுற்றுச்சூழல் உலக நாள் முதல் முறையாக சிறப்பிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு முதல், இந்த உலக நாளை முன்னின்று நடத்தும் பொறுப்பு, வெவ்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டது.

2017ம் ஆண்டு, இந்நாளை முன்னின்று நடத்த கானடா நாடும், "இயற்கையுடன் மக்களை இணைக்க" (Connecting People to Nature) என்பது அவ்வாண்டின் மையக்கருத்தாகவும் தெரிவு செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு, "ஞெகிழி மாசுப்பட்டை வெல்க" (Beat Plastic Pollution) என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உலக நாளை, இந்தியா முன்னின்று நடத்தியது. 2019ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 46வது சுற்றுச்சூழல் உலக நாளை முன்னின்று நடத்தும் பொறுப்பு, சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. "காற்று மாசுபாட்டை வெல்க"  (Beat Air Pollution) என்பது, இவ்வாண்டின் மையக்கருத்தாக அமைந்துள்ளது.

மக்களின் நலவாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, மாசுபட்டக் காற்று என்பதை WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்திக் கூறியுள்ளது. WHOவின் கணிப்புப்படி, மாசுபட்ட காற்றினால், உலகில் ஒவ்வோர் ஆண்டும், 42 இலட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், காற்று மாசுப்பாடு குறித்து WHO வெளியிட்டுள்ள பாதுகாப்பான அளவைத் தாண்டிய மாசுபட்டக் காற்றை, உலகின் மக்கள் தொகையில், 91 விழுக்காட்டினர் சுவாசிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இயற்கையோடும், சுற்றுச்சூழலுடனும் இயைந்து வாழ்ந்த அமெரிக்கப் பழங்குடியினர் நடுவே கூறப்படும் ஒரு பழமொழி: "இறுதி மரம் வெட்டப்பட்டபின், இறுதி மீன் உண்ணப்பட்டபின், இறுதி நீரூற்று நஞ்சாக மாறியபின், பணத்தை உண்ணமுடியாது என்பதை நீ உணர்வாய்". (Vatican News)

Add new comment

2 + 0 =

Please wait while the page is loading