செயற்கை கருத்தரிப்பில் குழந்தை மாற்றம் நடைபெறும் வாய்ப்பு 

IVI UK

கலிஃபோர்னியாவிலுள்ள கருவள சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பதால், தங்களுக்கு எவ்விட தொடர்பும் இல்லாத குழந்தையை பெற்றெடுக்க வேண்டியதாயிற்று என்று ஆசிய தம்பதி ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த தம்பதி செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றெடுக்க முயற்சி செய்தது.

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் இந்த தம்பதி வழக்கு பதிவு செய்துள்ளது. ஆசிய வம்சாவளியை சேராத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதால் இந்த தம்பதி அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த குழந்தைகள் இந்த தம்பதியரோடு தொடர்புடையவை அல்ல என்று டிஎன்ஏ சோதனைகள் உறுதி செய்துள்ளதாகவும், இந்த குழந்தைகளை இந்த தம்பதி கைவிட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியருக்கு கருவள சிகிச்சை அளித்த மையம் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தர்மசங்கடத்தையும், அவமானத்தையும் குறைக்கும் நோக்கத்தில் இந்த வழக்கில் ஏபி மற்றும் ஒய்ஸட் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தம்பதி, கருத்தரிப்பதற்கு முன்னால், மருந்து, ஆய்வக செலவுகள், பயணம் மற்றும் பிற செலவுகள் உள்பட ஐவிஃஎப் முறைப்படி கருத்தரிக்க ஒரு லட்சம் டாலருக்கு மேலாக செலவு செய்ததாக கூறியுள்ளது.

ஐவிஃஎப் என்பது பெண்ணிக் உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்க செய்து, பின்னர், அந்த பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்க்கும் முறையாகும்.

கடந்த வாரம் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், சிஹெச்ஏ கருவள மையம் இதற்கு காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தவறான மருத்துவ நடவடிக்கை, வேண்டுமென்றே மன உளைச்சலை ஏற்படுத்தியது உள்பட இந்த கருவள சிகிச்சை மையத்தின் உரிமையாளர்களும், இயக்குநர்களுமான இருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இந்த குழந்தைகளை பெற்றெடுத்த இந்த தம்பதி, தங்களின் மரபணுக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட எந்த அடையாளங்களும் இல்லாமல் இந்த குழந்தைகள் இருந்ததால் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சையின்போது ஆண் கருவை அகற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ஸ்கேன் செய்தபோது, இந்த தம்பதி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுப்பர் என்று தெரிவித்தபோதே குழப்பம் நடந்துள்ளதற்கான அறிகுறிகள் தோன்றியிருந்தன.

இந்த தம்பதி ஆண் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு முன்னால், ஸ்கேன் முடிவுகள் துல்லியமற்றதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், இந்த குழந்தைகள் இந்த தம்பதியருடையவை அல்ல என்பது மட்டுமல்ல, இந்த இரு குழந்தைகளுக்கு இடையேயும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் உயரிய அளவில் கவனம் அளித்தும், கண்ணியமான கடமை உணர்வோடும் இந்த சேவையை செய்வதாகவும் சிஹெச்ஏ கருவள மையம் அதனுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் கருத்தை பெறுவதற்கு பிபிசி தொடர்பு கொண்டது.

சிஹெச்ஏ கருவள மையத்தால், தங்களின் தரப்பினர் மிகுந்த அலட்சியத்தையும், பொறுப்பற்ற நடத்தையையும் அனுபவித்துள்ளதாக இந்த தம்பதியரின் வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களின் வாடிக்கையாளருக்கு இழப்பீட்டை பெற்று தருவதற்காகவும், இந்தகைய சோகம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதுமே தங்களின் நோக்கம் என்று இந்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

(நன்றி: பிபிசி நியூஸ்)

Add new comment

6 + 6 =

Please wait while the page is loading