சாதிக்க தடையில்லை - திருநங்கை ஸ்வேதா

https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/9DB4/production/_107427304_fd6d8a5e-fe5f-4adc-8782-ac03f4bb67ed.jpg

மாற்றுப் பாலினத்தவராக இருந்து சாதிப்பதே பெரும்பாடு. அதிலும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட திருநங்கையின் பாதை எவ்வளவு கரடுமுரடானதாக இருக்கும். அத்தனையும் தாண்டி முதல் திருநங்கை மருந்தாளர் என்ற இடத்தை அடைந்து இருக்கின்றார் ஸ்வேதா.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் மருந்தாளராக பணியில் இணைந்திருக்கும் ஸ்வேதா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாயலேரி என்ற கிராமத்தில் பிறந்தவர்.

சாலைப்பணிக்கு செல்லும் அப்பா, காட்டு வேலைக்கு செல்லும் அம்மா இருவரும் மிகவும் சிரமப்பட்டுத்தான் என்னைப் படிக்க வைத்தார்கள் , நானும் எப்படியாவது படித்து வாழ்வில் உயர்ந்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் படித்தேன் என்று கூறும் ஸ்வேதா, பி.பார்ம் பட்டதாரி.

பள்ளியில் படிக்கும் போதே , எனக்குள் உள்ள பெண்மையினை உணர ஆரம்பித்துவிட்டாலும், கல்லூரி படிப்பு முடியும் வரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில் அதற்கான வசதியோ, அது குறித்த பெரிய அறிவோ என்னிடம் இல்லை. ஆனால், நான் ஒரு பெண் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் வலிமையாக இருந்தது.

கல்லூரி படிக்கும் போதே திருநங்கை சமூகத்துடன் பழக ஆரம்பித்தேன். அப்போதே ஒரு முறை பெங்களூர் சென்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கேள்விப்பட்டு சென்றுவிட்டேன். ஆனால், என்னுடைய பேராசியரியை, படித்து முடித்துவிட்டு நீ நினைப்பது போல மாறிக்கொள்ளலாம். இப்போது தயவு செய்து வந்து படிப்பினை தொடர வேண்டும் என்று அறிவுரை கூறி திரும்ப வரவழைத்துவிட்டார்.

ஓர் ஆணாகவே கல்லூரி படிப்பினை தொடர்ந்தாலும் எனது செயல்பாடுகள் மூலம் நான் இப்படித்தான் என்று தெரிந்ததால் பல கேலிப்பேச்சுகள், அவமானங்களைத் தாண்டித்தான் கல்லூரி படிப்பை முடித்தேன்.

படிப்பு முடிந்ததும் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். என்னை நான் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். பி.பார்ம் முடித்த நான், சான்றிதழ்களோடு பல மருந்தகங்களில் சென்று வேலை கேட்டேன். "பார்ப்பதற்கு பெண் மாதிரி உடை அணிந்து இருக்கீங்க, சான்றிதழில் ஆண் என்று போட்டுள்ளது. காசு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள், வேலையெல்லாம் இல்லை" என்ற பதில்தான் செல்லுமிடத்தில் எல்லாம் கிடைத்தது.

சான்றிதழில் திருநங்கை என மாற்றலாம் என்று நினைத்தால், அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அதற்காக, பிறரிடம் கையேந்தி காசு வாங்குவது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் எல்லாம் எனக்கு துளியும் விருப்பமில்லை.

சிறு வயதில் இருந்தே எனக்கு நடனம் ஆடுவதில் பெரும் விருப்பம் இருந்ததால் கரகாட்டக் கலையினை எனது தொழிலாக தேர்ந்தெடுத்தேன்.

இடையில் எனது பெற்றோர்,நான் இப்படி ஆனதால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானது தெரிந்து நான் மீண்டும் வீட்டிற்கு சென்றேன். எனது அம்மாவுக்காக முடியெல்லாம் வெட்டி, ஆணைப்போலவே உடையணிந்து கொண்டு வேலைக்கு சென்றேன். மருந்தகத்தில் மூன்று மாதம் வேலை பார்த்தேன்.

ஆனால், மன அளவில் என்னால் என்னை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை, வேலை பார்க்கும் இடத்திலும் கேலிக்கு ஆளாவதும், அவமானப்படுவதும் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்டேன்.

வீட்டில் மீண்டும் எனது நிலையினை கூறி நான் திருநங்கையாக மாறிக் கொள்ளுகிறேன் என்று கேட்டபோது, பெற்றோர் ஒப்புக் கொள்ளாததால் மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறி, திருநங்கைகள் சமூகத்தோடு சேர்ந்து கரகாட்டம் ஆடுவதற்கு சென்றுவிட்டேன்.

கரகாட்டத்திற்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து, அதில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சென்றபோதுதான் எனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்று தெரிந்தது. எனக்கு எய்ட்ஸ் தொற்று எப்படி ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.

குடும்பமும் என்னுடைய மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை, படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை, எய்ட்ஸ் நோயும் சேர்ந்து விட்டால் எப்படி வாழ்வது என்று நொந்து போய் விட்டேன். யாரிடம் இந்த துன்பத்தினை பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

யாரோடும் பேசாமல், ஓர் அறைக்குள் முடங்கிக் கிடந்தேன். கரகம் ஆட செல்வது, மீண்டும் எனது சிறிய வீட்டிற்குள் சென்று முடங்கிக் கொள்வது என்றுதான் இருந்தேன். சொன்னால் எல்லோரும் நம்மை விட்டு விலக நினைப்பார்கள், வெறுத்து விடுவார்கள் என்று பயந்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

மீண்டெழுந்த கதை
ஒரு கட்டத்தில் தன்னை தானே திடப்படுத்திக் கொண்டு, இதில் இருந்து வெளியே வந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு காவலர் பணிக்கான தேர்வினை எழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். எழுத்து தேர்வினை தொடர்ந்து, உடல் தேர்விற்கு செல்லுமிடத்தில், அங்கு ஹெச்.ஐ.வி சோதனையும் செய்யப்படும் என்று தெரிந்தவுடன் யாருக்கும் தெரியாமல் திரும்பி விட்டார்.

மேலும், இது குறித்து பேசும் ஸ்வேதா , "இந்த சூழலில்தான் திருநங்கை கிரேஸ் பானு, நான் தேர்வில் வெற்றி பெற்றும் ,வேலை வாங்க முயற்சி செய்யவில்லை என்பது தெரிந்து எங்கள் ஊருக்கு வந்து என்னைப் பார்த்து, நிச்சயமாக வேலை வாங்கி விடலாம், உடல் தேர்வுக்கு செல்லுமாறு கூறினார். அவரிடம் இதில் எனக்கு விரும்பமில்லை எனக் கூறி மறுத்துவிட்டேன்." என்கிறார்.

"பிறகு என்னை தனியாக அழைத்து சென்று அவர் கேட்டபோது நான் எனது நிலையினை கூறினேன். அப்போதுதான் அவர்கள், இது ஒரு பிரச்சனையே இல்ல என்று கூறி இந்த கரகம் ஆடுவது எல்லாம் விட்டுவிட்டு என்னோடு வா என்று அழைத்து சென்றார்கள்."

புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகால பழமையான நடைப்பாலம்
நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்: இதுவரை காணாத புகைப்படங்கள்
சென்னையில் அவரின் உதவியோடு போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு சென்று கொண்டு இருந்தபோதுதான் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதை அறிந்து விண்ணப்பித்தேன். இதன் மூலமாக இந்தப்பணிக்கு தேர்வாகி , இப்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணியில் உள்ளேன் என்று கூறும் ஸ்வேதாவிற்கு சமீபத்தில்தான் இந்தப் பணி கிடைத்துள்ளது.

"நான் ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்று வெளியில் சொல்ல முடியாமல் அடைந்த வேதனையும், வலியும் மற்றவர் அனுபவிக்க கூடாது என்று நினைக்கின்றேன். என்னைப் போல இப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றேன். ஒருவருக்கு எய்ட்ஸ் என்றால் அவர்கள் மன அளவில் உடைந்து போய்விடுவார்கள், எங்கள் திருநங்கை சமூகத்தில் கூட நிறைய பேருக்கு இந்தப் பாதிப்பு இருக்கும், ஆனால், வெளியில் சொல்ல பயப்படுவார்கள். இவ்வளவு படித்த நானே இப்படி உடைந்து போய் விட்டபோது, படிக்காத, இது பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எப்படி வேதனைப்படுவார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை வெளியில் சொல்கிறேன். நான் ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்று வெளிப்படையாக கூறிக் கொள்வதன் காரணம், தனக்கு ஏற்பட்ட பாதிப்பினை வெளியில் சொல்ல முடியாமல், சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இந்த வேதனையில் இருந்து மீள முடியும் என்ற காரணத்தால்தான்," என்கிறார் ஸ்வேதா.

(நன்றி: பிபிசி தமிழ்) 

Add new comment

19 + 0 =

Please wait while the page is loading