கிளிமஞ்சாரோ “மரங்களின் ஆயர்”

கிளிமஞ்சாரோ “மரங்களின் ஆயர்” Frederick Shoo

டான்சானியா நாட்டிலுள்ள கிளிமஞ்சாரோ மலை (Mount Kilimanjaro), ஆப்ரிக்க கண்டத்தின் மிக உயரமான மலையாகும்.

இம்மலையில், "Kibo", "Mawenzi", "Shira" ஆகிய மூன்று கூம்பு வடிவ எரிமலைகள்  உள்ளன. இம்மலை, தரையிலிருந்து ஏறக்குறைய 4,900 மீட்டர் (16,100 அடி) உயரமும், கடல்மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,341 அடி)  உயரமும் உடையது.

இயற்கை அழகு நிறைந்து விளங்கும் இந்த மலையிலிருந்து கிடைக்கும் தண்ணீர், அம்மலையின் அடிவாரங்களிலும், அதற்கருகிலும் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்து வருகின்றது.

ஆயினும் கடந்த நூறு வருடங்களில், இம்மலையின் பனிமுகடுகள், 92 விழுக்காடு கரைந்துவிட்டன. இந்நிலை தொடர்ந்தால், 2020ம் ஆண்டுக்குள் பனிசிகரங்கள் முழுவதுமாக மறைந்துவிடும் அபாயம் தெரிகின்றது.

எனவே இந்த மலையை எப்போதும் குளிர்ச்சியாகவும், ஈரப்பதம் உள்ளதாகவும் வைப்பதற்கு, மரங்கள் நடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார், லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆயர் Frederick Shoo அவர்கள்.

இவர், டான்சானியா நாட்டின் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபையின் வட பகுதி மறைமாவட்ட துணை ஆயர். இம்மறைமாவட்டத்தின் 164 பங்குத்தளங்களிலுள்ள ஐந்து இலட்சம் மக்களின் ஆயராக இவர் பணியாற்றி வருகிறார்.

 கிளிமஞ்சாரோ மலையின் இயல்பை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தனது மறைமாவட்ட மக்களை ஈடுபடுத்தி வருகிறார் ஆயர் Shoo அவர்கள். கிளிமஞ்சாரோ மலை உச்சியுள்ள பனி முகடுகள் கரைந்துவிட்டால், அந்நிலை, அம்மலையைச் சுற்றி வாழ்கினாற மக்களுக்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் தொட்டிலாகிய ஆப்ரிக்காவுக்கும், மனித சமுதாயம் முழுவதற்குமே பெரும் இழப்பை வருவிக்கும்.

கிளிமஞ்சாரோ மலையை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதும் ஆயர் Frederick Shoo அவர்கள், அம்மலையில், மக்களை வைத்து, பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்.

ஆண்டுக்கு குறைந்தது 16 இலட்சத்து 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற திட்டத்தில் மக்களை ஊக்குவித்து அதில் ஈடுபடுத்தி வருகிறார்  அவர்.

இவரது மறைமாவட்டம், பத்து இலட்சத்திற்கு அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளது. பங்கு மக்கள் எல்லாரும் மரங்கள் நடுவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஊக்குவித்து வருகிறார் அவர்.

உறுதிபூசுதல் பெறும் மாணவர்கள் அனைவரும் பல மரங்களை நட்டு, அவை நன்கு வளரும்வரை, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார், லூத்தரன் சபை ஆயர் Frederick Shoo. இவர், கிளிமஞ்சாரோ “மரங்களின் ஆயர்” என போற்றப்படுகிறார். (வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 0 =

Please wait while the page is loading