உலக சுற்றுச்சூழல் நாள்: காற்று மாசுகேடு: ஐ.நா. கொண்டுள்ள கருத்து என்ன?

காற்று மாசுகேடடைந்துள்ள இந்திய நகர், கான்பூர் (AFP or licensors)

காலநிலை மாற்றம், மக்கள் உயிர்வாழ்வதற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாகவும் உள்ளவேளை, உலகளாவிய சமுதாயம், காற்று தூய்மைகேட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

“காற்று மாசுகேடு” என்ற தலைப்பில், ஜூன் 05, இப்புதனன்று, உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, ஜூன் 03, இத்திங்களன்று காணொளிச் செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள கூட்டேரெஸ் அவர்கள், நிலக்கரியால் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் கட்டப்படுவது நிறுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

காற்று மாசுகேடால் மரணங்கள்

மேலும், அரசுகள், குடிமக்களுக்குத் தூய்மையான காற்றை வழங்கத் தவறுவது, வாழ்வு, உடல்நலம், மற்றும் நலமான சூழலில் வாழ்தல் ஆகியவற்றிற்கு மக்களுக்குள்ள உரிமைகளை மீறுவதாகும் என்று, ஐ.நா. வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை வழங்கும் ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி David Boyd அவர்கள், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இவ்வாறு கூறியுள்ளார். மனிதரால் உருவாக்கப்படும் பிரச்சனையாகிய காற்று மாசுகேடு, மரணத்தைக் கொண்டுவருவதாகும், ஏறத்தாழ ஆறு இலட்சம் சிறார் உட்பட, ஒவ்வோர் ஆண்டும் எழுபது இலட்சம் பேர், முதிர்வயதை எட்டுவதற்கு முன்னரே இறப்பதற்கு இதுவே காரணம் என்றும், Boyd அவர்கள் உரைத்துள்ளார்.

மனித உரிமைகள் சார்ந்த தங்களின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக, அரசுகள், தூய்மையான காற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர், மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்றும், இதனால், உலகில், ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருவர் இறக்கின்றார் என்றும் கூறியுள்ளார், Boyd.

1974ம் ஆண்டிலிருந்து, உலக சுற்றுச்சூழல் நாள், கடைப்பிடிக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவும், அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், இந்த உலக நாளில், ஐ.நா. நிறுவனம், உலக அரசுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

நலமான சூழலைக் கொண்டிருப்பதற்குரிய உரிமை, மனிதரின் நலவாழ்வுக்கு அடிப்படையானது என்பது, சட்டமுறைப்படி, உலக அளவில் ஏற்கப்பட வேண்டும் எனவும், Boyd அவர்கள் தெரிவித்துள்ளார். (UN) (Vatican News)

Add new comment

8 + 10 =

Please wait while the page is loading