உலகச் செய்த்திகள்

chennai egmore hospital image

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து நான்கு மாத குழந்தையின் இதயத்தில் கட்டி அகற்றப்பட்டது!

சென்னை எழும்பூர் அரசு குழந் தைகள் நல மருத்துவமனையில், பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையின் இதயத்தில் இருந்த கட்டி, அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (30). சிங்கப்பூரில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெயந்திக்கு (21) விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குறைப் பிரசவம் என்பதால் குழந்தையின் எடை குறைவாக இருந்தது. குழந்தைக்கு மூச்சுத் திணறலும் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தையின் இதயத்துக்குள் வால்வுகளை ஒட்டியபடி பூஞ்சை தொற்று பாதிப்பு ஒரு கட்டிபோல இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஜி.கே.ஜெய்கரன் தலைமை யிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை யின் இதயத்துக்குள் இருந்த கட்டியை அகற்றினர். சிகிச் சைக்குப் பிறகு குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இதுகுறித்து மருத்துவமனை யின் இயக்குநர் அரசர் சீராளர், குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஜி.கே.ஜெய்கரன் ஆகியோர் கூறியதாவது:

குறைப் பிரசவத்தில் பிறந்ததால், குழந்தையின் எடை 1 கிலோ 600 கிராம்தான் இருந்தது. இந்த மருத்துவனையில் சேர்க்கப்பட்ட பிறகு, குழந்தையின் எடை 1 கிலோ 700 கிராமாக அதிகரித்தது.

4 மாதக் குழந்தை என்பதால் சிக்கலான, சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது. முதலில் மருந்து மூலமாக கட்டியை கரையவைக்க முயற்சி செய்யப்பட்டது. அது சரியாக வராததால், இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இதயத்துக்குள் இருந்த கட்டி அகற்றப்பட்டது.

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். ஆனால், இதுபோல இதயத்துக்குள் கட்டி போன்ற பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது.

இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தது இந்த மருத்துவமனையில் இது முதல்முறை. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 4 மாதங்களாக குழந்தைக்கு தேவையான சிகிச்சைகள் அளித்து செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.20 லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Add new comment

3 + 8 =

Please wait while the page is loading