இலவசமாகப் பெற்றதை இலவசமாகவே வழங்குங்கள்

19 தியோக்கோன்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்திய திருப்பலி (Vatican Media)

இலவசமாகப் பெற்றதை இலவசமாகவே வழங்குங்கள்

14 மே, 2019.

பணிவிடை பெறுவதற்கல்ல, மாறாக, பணிவிடைபுரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை  நினைவில் கொண்டவர்களாக, காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என,  புதிதாக திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 56வது உலக நாளாகிய, மே 12, இஞ்ஞாயிறு காலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றி, 19 தியோக்கோன்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையைப்போல், அருள்பணியாளர்களும், இரக்கமுள்ளவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நீங்கள் இலவசமாகப் பெற்ற அனைத்தையும் இலவசமாகவே வழங்குங்கள் என்று கூறிய இயேசுவின் குரலுக்கு செவிசாய்த்தவர்களாகவும், ஆயர்களுடனும், உடன் அருள்பணியாளர்களுடனும், இறைமக்களுடனும் செபத்தில் ஒன்றித்திருப்பவர்களாகவும் வாழ அருள்பணியாளர் அழைப்பு பெற்றிருப்பதை எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்பட்ட 19 தியாக்கோன்களும், இத்தாலி, ஹெயிட்டி, பெரு, ஜப்பான் மற்றும் குரோவேஷியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளை உருவாக்கியதைத் தொடர்ந்து, உயிர்ப்புக்காலத்தின் நான்காம் ஞாயிறாகிய, நல்லாயன் ஞாயிறன்று, ஒவ்வோர் ஆண்டும், தியோக்கோன்களை, அருள்பணியாளர்களாக இந்நாளில் திருநிலைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் திருத்தந்தையர். (வத்திக்கான் செய்தி)

Add new comment

5 + 1 =

Please wait while the page is loading