இயேசு இங்கு நமக்குக் கற்றுத் தருகிறார் - திருத்தந்தை

குருத்து ஞாயிறு திருப்பலியில் - 140419 (Vatican Media)

எருசலேமுக்குள் தான் நுழைந்தபோது தனக்கு அளிக்கப்பட்ட ஆரவார வரவேற்பில் தன்னையே இழந்துவிடாத இயேசு, தன் முன் நிற்கும் சிலுவையை குறித்து உள்ளத்தில் அமைதியாக எண்ணியவராக, ஊர்வலத்தில் கலந்துகொண்டார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட குருத்தோலை ஞாயிறையொட்டி, ஏறத்தாழ 50,000 பேர், வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழுமியிருக்க, அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.

'நான் ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்ட, மறைமாவட்ட அளவிலான 34வது உலக இளையோர் நாளையும் ஒட்டி, திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொண்டாட்டத்தில் துவங்கும் இவ்வாரம், இயேசுவின் துன்ப நிலைகளை நமக்குக் காண்பித்து, மீண்டும் வெற்றியில் நிறைவுறும் என்று கூறினார்.

எந்த ஒரு துன்பச் சூழலிலும், இதயத்தில் அமைதியை இழக்காமல், இறைத்தந்தையிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பதை, இயேசு இங்கு நமக்குக் கற்றுத் தருகிறார் எனவும் கூறினார், திருத்தந்தை.

இயேசுவை வெற்றிவாகைச் சூடியவராக காண்பித்து மக்கள் கொண்டாடினாலும், அதனுள் இருக்கும் தீயோனின் சோதனையை உணர்ந்த இயேசு, பணிவு எனும் பாதையையே தேர்ந்தெடுத்தார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய திருஅவையை அச்சுறுத்தும் 'ஆன்மீக உலகாயுதப் போக்கு' குறித்தும் கவலையை வெளியிட்டார். (வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 16 =

Please wait while the page is loading