வாழ்வை வாழத்தொடங்குவோம்...

no matter how big your opponent is

பீகார் மாநிலம் கயான் என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் பாகலூர். அங்கு வாழும் மக்களுக்கு நிலம் இல்லை, படிக்க வழியில்லை, மருத்துவ வசதியில்லை. பசித்தால் சில வேலைகளில் நத்தை, எலிகள், மர வேர்களை திண்ணும் அவலநிலைதான் அவர்கள் வாழ்க்கை. தங்கள் அடிப்படைத் தேவைக்குக்கூட மலையைக் கடந்து சுமார் 50 கி.மீ. மலையைச் சுற்றி செல்லவேண்டும் அல்லது மலையிடையே ஒரு அடிக்கு குறைவான அகலப் பாதை வழியேச் செல்லவேண்டும். 

இத்தகைய சூழ்நிலையில் தன் மனைவியும் தன்னைச் சுற்றி வாழ்பவர்களும் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, வரலாறாக உருபெற்று இன்றும் மக்கள் மனதில் வாழ்பவர்தான் தஸ்ரத் மஞ்சி (தஸ்ரத் பாபா). மக்களுக்கு எளிதாகச் செல்ல பாதை அமைக்கவேண்டும் என்னும் சிந்தனையின் விளைவாக மலையைக் குடைந்து பாதை அமைப்பது என்று முடிவு செய்தார். மதியம் வரை தன் குடும்பத்திற்காக உழைத்தார். மதியத்திலிருந்து உளியும் சுத்தியலுடன் பாதை அமைக்க முனைந்தார். 

இப் பயணத்தில் தமக்கு மிகவும் உறுதுணையாக இருந்த தம் மனைவியை இழந்தார். சொந்த மக்களால்; மனவேதனை அடைந்தார். ஆனால் பயணம் தொடர்ந்தது. 1960-இல் தொடங்கிய பயணம் அவருடைய பயணம் 1982-இல் மக்களின் விடுதலைப் பயணப் பாதையாக அமைந்தது. 30 அடி அகலம், 1.5 கி.மீ. நீளம் கொண்ட மலைப்பாதையை அமைத்தார். 1997 ஆகஸ்ட் 18-ஆம் நாள் இம் மாமனிதரின் உயிர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் காலத்தையும் இடத்தையும் கடந்து மக்கள் மனத்தில் குடியேறியுள்ளார். காலாகாலத்துக்கும் நம்மை தட்டி எழுப்புற மனிதர் என்று அனைவராலும் புகழாராம் சூட்டப்பட்டு, மாநில முதலமைச்சர், அதிகாரிகள்  முன்னிலையில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு அவருக்குக் கொடுக்கப்பட்டது. 

வாழ்க்கை என்பது ஒரு பயணம். நாம் தொடங்குகின்ற இந்த பாதை ஒரு முடிவை நோக்கிச் செல்கின்றது. அந்த முடிவு எப்ப வரும் என்பது நமக்கு தெரியாத ஒரு மறைபொருள். இந்த பயணத்தில் ஒரு இலக்கின்றி வாழ்ந்து செல்லலாம் அல்லது மானிடத்தை தட்டி எழுப்பி இறப்பிற்கு பிறகும் நமக்கு நிறைவாழ்வையும், நம் வாழ்வு பலருக்கு நிலையான வாழ்வாக அமையும் விதமாகவும் வாழ்ந்துவிட்டுச் செல்லலாம். நாம் எப்படி நினைவுகூறப்பட விரும்புகின்றோம் என்பது நாம் எதை நோக்கிச் செல்கின்றோம் என்பதை பொறுத்தே அமையும். 

நம் வாழ்வு பயணத்தில் பல்வேறு சூழல்களால் சிறைப்படுத்தப்படுகிறோம்: தாழ்வு மனப்பான்மையாகவோ, குற்றவுணர்வாகவோ, கடந்தகால வாழ்வாகவோ, பணமாகமோ, பதவியாகவோ இருக்கலாம். ஆனால் இச் சூழ்நிலையெல்லாம் கடந்து எழுந்திட வேண்டும் (Rise Beyond). இறைமகன் இயேசு (யோவா 17:4) கூறுகிறார்: “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.” ஆக நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அதை நாம் நிறைவேற்ற வேண்டும். கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளை சக்திகளை பயன்படுத்தி நாம் உலகை வளப்படுத்த வேண்டும். ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதல்ல, மனுடத்திற்கு நம் வாழ்வுமுறையால் புதிய அர்த்தம் கொடுக்கவேண்டும்.

என்ன செய்யப்போகிறோம்: இலக்கை தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கை அடைய தேவையான விழும்பியங்கள், நற்பண்புகளை தேர்ந்துதெரியவேண்டும். 2.30 மணிநேரம் போகும் சினிமாவில் 2.20 நிமிடம் முழுவதும் வன்முறைகளும், உணர்வுகளுக்கு தீனிபோடும் காட்சிகளும், தவறான விழுமியங்களும் நம்மை அறியாமல் நமக்குக் கொடுக்கப்படுகின்றது. கடைசிப் பத்து நிமிடம்தான் ஒரு தியாகச் செயலைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள. இதில் எதை எடுத்துக்கொள்ளப்போகின்றோம். ஆக நாம் நம்முடைய விழுமியங்களை முடிவு செய்யவேண்டும். 

அடுத்ததாக நமதாக்கிய விழுமியங்களால் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்வாக வேண்டும்: இது எளிமையான காரியமல்ல. பல நாட்கள் பல இரவுகள் கடினப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, நம்மையே ஒடுக்கித்தான் இதைப் பெறமுடியும். ஆனால் நாம் அதைப் பெற்றே ஆக வேண்டும். நம்முடைய இலக்கு என்ன என்பதை நம்முடைய விழுமியங்கள் அடிப்படையில் வரையறுத்து நமதாக்கிக்கொண்ட நாம், நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் வாழ வேண்டும். 

கடைசியாக நாம் மற்றவர்களை உருவாக்கவேண்டும்: நமது வாழ்வும் வாழ்வின் அனுபவப் பகிர்வும் வளரும் சந்ததியினருக்கு அனுபவமாக மாறவேண்டும். வாழ்;க்கை முறையாக வேண்டும். இதைத்தான் தமிழகத்தில் சிவகங்கை மறைமாவட்டத்தில் வாழ்ந்து வாழ்வளித்து இறந்தும் வாழ்கின்ற இறை ஊழியர் லூயி லெவே அவர்கள் செய்தார்கள். இறைவனையே தன்னுடைய வாழ்வின் இலக்காக நிர்ணயித்து, அவர் விரும்பும் விழுமியங்களை தனதாக்கி, தன்னுடைய திறமைகளையுமு; சக்திகளையும் அதற்காக செலவிட்டார். இரவு பகலாக தன்னையே உருவாக்கி ஓர் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தார். காலாகாலத்துக்கும் நம்மை தட்டி எழுப்புற இறை மனிதராக நம் மத்தியில் செயல்படுகின்றார். 

ஒவ்வொரு முறையும் நாம் இறந்தவர்களுக்காக செபிக்கின்றபோதும், இறந்தவர்கள் வழியாக நாம் செபிக்கின்றபோதும் இப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்தவர்களையும் வாழத்தூண்டியவர்களையும் நினைத்துப் பார்ப்போம். நாமும் இறந்தாலும் என்றும் மக்களில் வாழக்கூடிய வாழ்வுக்கு நம்மையே தயார்படுத்துவோம். 

நாளை என்பது உறுதியற்ற நம்பிக்கையே. இன்றே வாழத் தொடங்குவோம்.
 

Add new comment

7 + 8 =

Please wait while the page is loading