தேடல் தேங்காது...

மானிட வரலாற்றில் மாற்றங்களாகவும் மானிட தத்துவத்தின் அடிப்படை நாதமுமாய்  விளங்குவது மனிதனின் தேடல். ஆக மாற்றங்களுக்கு அடிப்படை மனிதனின் தேடல் என்று சொன்னால் அது மிகையாகாது. இது வரலாறு நமக்குக் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்.

மனிதன் தன் வாழ்வு நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் புதியவனவற்றை அல்லது புதிய நிலைக்கு கடந்து செல்ல முயலும்போது, ஒரு புதிய தேடலில் இயங்கும்போது விளைவது மாற்றங்கள், வரலாற்று சரித்திரங்கள்.

ஒவ்வொரு மனிதனும் தம் இயக்கத்தில் ஒருவகையான தேடலில் ஈடுபடுகின்றான். ஆனால் அவனுடைய அந்தத் தேடல் சரியான பாதையில் சென்றால்தான் அங்கு வளர்ச்சியைக் காணமுடியும். இல்லையென்றால் அது வரலாற்று அழிவுக்கு வித்திட்டிருக்கின்றது என்பது வரலாறு கற்றுத்தரும் பாடம்.

சாதாரண ஆசிரியராக இருந்த திரேசா அன்னை திரேசாவாக, அருளாளராக, புனிதராக உயர்த்தப்படுவது என்பது மானுடச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்னும் உயரிய தேடலில் பயணித்ததன் விளைவே. 

உலகின் ஒட்டுமொத்தத்தையும் தன் அழகினால் ஈர்த்தவர் இளவரசி டயனா. அவள் ஏழைகளுக்கு உதவுவதற்கு அன்னை திரேசாவுடன் கைகோர்த்திருக்கின்றாள். ஆனால் அழகை மையப்படுத்திய அவளுடையத் தேடலில் மாற்றம் ஏற்பட்டபோது. அவளுடைய வாழ்வு போற்றத்தக்கதாக அமையவில்லை.

வரலாற்றில் முட்டாள்களாக எதற்கும் உதவாதவர்களாக புறந்தள்ளப்பட்டவர்கள். மூலைக்கற்களாக மைல்கற்களாக ஒளி வீசுவதை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். ஆக எல்லா மனிதர்களும் தேடலில் இயங்குகின்றோம். அந்த இயக்கம் செம்மைப்படுத்தப்பட்டு சரியான உயரிய பாதையில் பயணிக்கப்படும் போது இந்த உலகம் செழுமையடைகின்றது.

விவிலியத்தைத் தேடலின் சங்கமமாக கூறுவார்கள். ஆபிரகாமின் தேடல் அவரை நம்பிக்கையின் தந்தையாக மாற்றியது. மோயீசனின் தேடல் மக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைவதற்கு வித்திட்டது. திருத்தூதர்களின் தேடல் இன்று இறையாட்சியின் விழுமியங்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கும் மனிதநேயம் மலர்வதற்கும் வித்தாய் அமைந்துள்ளது.

இம் மாதம் நாம் புனித தோமையாரின் விழாவைச் சிறப்பிக்கின்றோம். திருத்தூதர்களில் என்னை மிகவும் கவர்ந்த மனிதர். இயேசுவை முழுமையாகத் தேடியவர். யோவான் நற்செய்தியாளர் 11:6-இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாமும் செல்வோம் அவரோடு இறப்போம்.” இயேசுவோடு இருந்து அவரோடு அவரை முழுமையாக அறியவேண்டும் என்னும் அவருடைய தேடல்தான் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தியது. கடல் கடந்து இறையாட்சிப் பணியை பறைசாற்றியவர் என்று நம்முடைய பாரம்பரியம் கூறுகின்றது.

நம்முடைய தேடல் தேங்கியிருக்கின்றதா? அல்லது புதியன நோக்கி பயணிக்கின்றதா? சிந்திந்தியுங்கள். தேங்கியிருக்கும் தேடலை புதிய உத்வேகத்துடன் தொடரும் இறையாட்சியின் சாட்சிகளாய் மாறுவோம். 

Add new comment

1 + 15 =

Please wait while the page is loading