புனித பெனடிக்ட் பதக்கம் பெற்ற அருள்சகோதரி பெர்க்மான்ஸ் 

The Tablet

பாகிஸ்தானில், மதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பணியிலும், கல்விப்பணியிலும் ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பணியாற்றிய அருள் சகோதரி பெர்க்மான்ஸ் அவர்களுக்கு, புனித பெனடிக்ட் பதக்கம் என்ற உயரிய விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இலண்டன் நகரின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவை, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், தலைமையேற்று நடத்தி, இவ்விருதை வழங்கினார்.

அனைவரையும் ஒருங்கிணைக்கும் கல்விப்பணியில், அர்ப்பண உணர்வுடன் தன்னையே வழங்கிய அருள் சகோதரி பெர்க்மான்ஸ் அவர்கள், இன்றைய இளம் தலைமுறையினருக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டகத் திகழ்கிறார் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

1930ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த பெர்க்மான்ஸ் அவர்கள், தன் 21வது வயதில், இயேசு மரியா துறவு சபையில் இணைத்து, 1953ம் ஆண்டு, தன் 23வது வயதில் பாகிஸ்தானில் பணியாற்றச் சென்றார்.

அருள் சகோதரி பெர்க்மான்ஸ் அவர்களின் மாணவராக இருந்தவர்களில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், காலம் சென்ற பெனசீர் பூட்டோ அவர்களும், விண்வெளி ஆய்வில், 2017ம் ஆண்டு நொபெல் விருது பெற்ற இயற்பியல் குழுவின் உறுப்பினர், நெர்கிஸ் மவல்வாலா அவர்களும் அடங்குவர்.

2012ம் ஆண்டு, அருள் சகோதரி பெர்க்மான்ஸ் அவர்கள் கராச்சியில் பணியாற்றிய வேளையில், பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, Sitara-i-Quaid-i-Azam விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வேளையில் பாகிஸ்தான் அரசுத்தலைவர் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில், கடந்த 59 ஆண்டுகளாக கடமை தவறாமல் உழைத்த அருள் சகோதரி பெர்க்மான்ஸ் அவர்கள், நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வாழும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று கூறியிருந்தார்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

8 + 4 =

Please wait while the page is loading